நாள் 01
“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை”: கரவெட்டியில் தேசிய நேர்மை வாரத் தொடக்க நிகழ்வு மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு.
ஜூலை 27 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியை "ஸ்ரீலங்கா கிளீன் ஸ்ரீலங்கா - தேசிய நேர்மை வாரம்" என ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக, நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான முதலாம் நாள் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (27.07.2026) காலை 9:00 மணிக்கு கரவெட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வைத் தொடர்ந்து, கரவெட்டி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் முக்கிய தேசிய முன்னுரிமைகளாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய மூன்று திட்டங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தின் பிரதான அங்கமாக அரசு சேவைக்கான நேர்மை கலாச்சாரத்தை உருவாக்கும் செயல்பாடு தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது அனைவரது ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய பொறுப்பாகும்.
ஒரு அரச உத்தியோகத்தரிடம் இருக்க வேண்டிய நேர்மை, பொறுப்புணர்வு, கடமையுணர்வு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை நாம் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு திறமையான, வெளிப்படையான மற்றும் வினைத்திறன் மிக்க சேவையை வழங்குவதே எமது அடிப்படை கடமையாகும்" எனக் குறிப்பிட்டார்.அத்தோடு அரச சேவையின் வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியும்.
இந்த தேசிய நேர்மை வாரத்தை வெறுமனே ஒரு வார கால நிகழ்வாக மட்டும் கருதாதது அரச சேவையின் அடித்தளத்தை நிலையானதாக மாற்றியமைக்கும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கான ஒரு அணுகுமுறையாகக் கருதி அனைவரும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து சமுர்த்தி முகாமையாளர் திரு.அன்ரனி இராஜப்பு அவர்களால் நேர்மை வாரம் தொடர்பான சிறப்பு உரை வழங்கப்பட்டது.
ஒவ்வொரு உத்தியோகத்தரும் தங்களது பணிகளை நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொண்டு பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதே “நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” என்ற இலக்கை அடைவதற்கான உறுதியான அடித்தளமாகும்.

நாள் 02
"நேர்மைமிக்க, டிஜிட்டல் அரச சேவை" திகதி - 2026 ஜூலை 28 (செவ்வாய்க்கிழமை)
முக்கிய கருப்பொருள் - நிதி, டிஜிட்டல், தொழில் முயற்சியாண்மை மற்றும் தொழில்நுட்ப நேர்மையை மேம்படுத்தும் நாள்.
தேசிய நேர்மை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 28, செவ்வாய்க்கிழமை), அரசுத் துறையில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் உறுதி செய்வதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிதி நிர்வாகத்தின் பங்கு குறித்து சிறப்பு அவதானம் செலுத்தப்பட்டது.நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அரச சேவைகளை விரைவாகவும், ஊழலற்ற முறையிலும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே இன்றைய நாளின் முதன்மை நோக்கமாகும்.இதற்கமைவாக, இன்றைய தினம் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு "நிதி நிர்வாகத்தின் பங்களிப்பு" குறித்து கரவெட்டி பிரதேச செயலகத்தின் கணக்காளர் அவர்களாலும், நிதி உதவியாளர் அவர்களினாலும் தெளிவான விளக்கமளிக்கப்பட்டது.
இன்றைய நாளின் முக்கிய நோக்கங்கள்
டிஜிட்டல் அரசாங்கச் சேவைகள் (Digital Public Services).
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், இடைத்தரகர்களின் தலையீட்டைக் குறைத்து வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல்.
இணையவழி (Online) கட்டணக் கொடுப்பனவுகள்.
இணையவழி ஊடான கொடுப்பனவுகள் மற்றும் சேவை விண்ணப்பங்களை அரச துறையில் மேலும் ஊக்குவித்தல்.
நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை.
நிதி ஒதுக்கீடுகள், திட்டச் செலவீனங்கள் மற்றும் அரச கொள்வனவுகளில் (Public Procurement) முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு கணினிமயப்படுத்தப்பட்ட அமைப்புகளைப் பயன்படுத்துதல்.
தொழில் முயற்சியாண்மை & வர்த்தகச் சூழலை எளிமையாக்குதல்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வெளிப்படையான முறையில் அரச சேவைகளையும் அனுமதிகளையும் பெறுவதற்கான வசதிகளைச் செய்து தருதல்.
"டிஜிட்டல் தொழில்நுட்பமும் நிதி சார்ந்த நேர்மையும் இணையும் போது மட்டுமே ஒரு நாட்டின் அரச சேவை திறம்பட இயங்க முடியும்."
"நேர்மைமிக்க, டிஜிட்டல் அரச சேவை" என்ற இன்றைய இலக்கை அடைவதற்கு அனைத்து அரச அதிகாரிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்.

நாள் 03
தேசிய நேர்மை வாரம் மூன்றாம் நாள் நிகழ்வு -29.07.2026
தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு, அதன் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (2026 ஜூலை 29, புதன்கிழமை) கரணவாய் கறுப்பையடி அறநெறிப் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.எமது கரவெட்டி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இன்றைய கருப்பொருள் ஆன்மீக, நெறிமுறை, கலாசார மற்றும் சமூக நேர்மையை மேம்படுத்தும் நாள்.கருப்பொருள் வாசகம் "மனித மாண்பு நிறைந்த நேர்மைமிக்க சமூகம்"
சமூகத்தில் ஆன்மீக விழுமியங்களையும், நெறிமுறைகளையும், கலாசாரப் பண்பாடுகளையும் விதைப்பதன் மூலமே ஒரு நேர்மையான மற்றும் மாண்புமிகு சமூகத்தை உருவாக்க முடியும் என்ற நோக்கில், அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கும் வகையில் இந்நடவடிக்கை அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

நாள் 04
தேசிய நேர்மை வாரம் – 4ஆம் நாள் விழிப்புணர்வு நிகழ்வு 30.07.2026
தேசிய நேர்மை வாரத்தின் 4ஆம் நாளான இன்று (2026 ஜூலை 30), பொதுமக்களிடையே நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இன்றைய நாளில் சமரபாகு மற்றும் துன்னாலை கிழக்கு ஆகிய இரு பகுதிகளிலும் பொதுமக்களை நேரடியாகச் சென்று சந்தித்து, நேர்மை குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.இவ்விழிப்புணர்வு நிகழ்வினை கரவெட்டி பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் உளவள துணை உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

நாள் 05
தேசிய நேர்மை வாரத்தின் 5-ஆம் நாள் நிகழ்வு 31.07.2026
விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை விழிப்புணர்வு
தேசிய நேர்மை வாரத்தினை முன்னிட்டு ஐந்தாம் நாளான இன்று கரணவாய் கிழக்கு பிரிவில் உள்ள விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில், சூழல் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதுடன், தற்போது நிலவி வரும் எல்நினோ (El Nino) காலநிலை மாற்றத்தினால் விவசாயத் துறையில் ஏற்படும் சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வினை விவசாய போதனாசிரியர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுச்சூழல் உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்தி, விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் விழிப்புணர்வுக் கருத்துக்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.













