முழுச் சமூகத்தையும் சீரழித்து வரும் நச்சுப் போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், 'ரட்டம எகட்ட' (நாட்டிற்காக ஒன்றாக) தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு இணையாக நாடளாவிய ரீதியில் பங்குனி முதலாந்திகதி ஆரம்பமான போதைப்பொருள் ஒழிப்பு வாரம் "விஷ போதைப்பொருள் ஒழிப்பு வாரம் "எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இதன் ஒரு அங்கமாக, கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கரவெட்டி போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
விஷப் போதைப்பொருட்களால் ஏற்படும் அழிவுகரமான தாக்கங்கள் குறித்து சமூகத்திற்குத் தெளிவுபடுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருள் பாவனையின் அபாயங்கள் மற்றும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து விசேட கருத்தரங்குகள் நடாத்தப்பட்டதோடு பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடும் பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நேரடி விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன.
போதைப்பொருள் தடுப்புத் தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் கரவெட்டி பிரதேச செயலக போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களினால் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், போதைப்பொருள் அற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் கரவெட்டி பிரதேச செயலகம் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
சமூகத்தின் எதிர்காலமான இளைஞர்களையும் மாணவர்களையும் பாதுகாப்பதோடு விஷ போதை பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்துவதோடு போதை பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை அவ் அழிவுகரமான பழக்கத்திலிருந்து விடுவித்து போதை அற்ற சமூகத்தை உருவாக்குவதே இச்செயற்பாட்டின் முதன்மை நோக்கமாகும்.














